ஹிட்லரின் ஏகாதிபத்திய ஆட்சியை முற்போக்காகக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய தலைமையிலான ஆட்சி முன்னெடுப்பு - துஷார இந்துநில் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

ஹிட்லரின் ஏகாதிபத்திய ஆட்சியை முற்போக்காகக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய தலைமையிலான ஆட்சி முன்னெடுப்பு - துஷார இந்துநில்

(எம்.மனோசித்ரா)

ஹிட்லர் படிப்படியாக பாராளுமன்றத்தை பலவீனமடையச் செய்து, இறுதியில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்ததைப் போலவே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் செயற்படுகிறது. அரசாங்கத்தின் மோசடிகள் எதிர்த்தரப்பினரால் வெளிப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் பாராளுமன்ற அமர்வு தினங்களும் நேரமும் சூட்சுமமான முறையில் குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு எமக்குள்ள ஒரே களம் பாராளுமன்றமாகும். ஆனால் தற்போது மிகவும் சூட்சுமமான முறையில் பாராளுமன்றம் கூடும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்விற்கான தினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தைக் கூட்டுவதை ஆளுந்தரப்பினர் விரும்பவில்லை. இயன்ற வரை பாராளுமன்றத்தைக் கூட்டாமலிருப்பதையே இவர்கள் விரும்புகின்றனர்.

கருத்துக்களை தெரிவிப்பதற்கு எமக்குள்ள களத்தை இவர்கள் இல்லாமலாக்குகின்றனர். எமக்கு மாத்திரமல்ல. பாராளுமன்ற செய்தியாளர்களுக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட சகலருக்கும் பாராளுமன்றத்திற்கு வருகை தர அனுமதியளிக்க முடியுமெனில் ஏன் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்க முடியாது ? ஊடகவியலாளர்கள் அனைவரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா ?

பாராளுமன்றத்தில் பேசப்படும் விடயங்கள் அரசாங்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் அறியும். இவற்றை மக்களுக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. 

இதனையே ஹிட்லரும் செய்தார். அவர் ஜனநாயக ரீதியாக ஆட்சியை கைப்பற்றினார். அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நாளாந்தம் பாராளுமன்றத்தை பலவீனமடையச் செய்தார். தொடர்ச்சியாக இவ்வாறு செய்து இறுதியாக பாராளுமன்றத்தையே தீக்கிரையாக்கினார். அதன் பின்னரே சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்தார். ஹிட்லரின் ஏகாதிபத்திய ஆட்சியை முற்போக்காகக் கொண்டுதான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி முன்னெடுக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் முக்கிய பிரச்சினைகளை மறைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடாகும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி மூலம் 1,200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் சீனிக்கான இறக்குமதி வரி சலுகையினால் 1,600 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சீனாவுடன் தொடர்புடைய தனியார் நிறுவனமொன்றே இதன் மூலம் பாரியளவு இலாபத்தை பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இதன் மூலம் நுகர்வோருக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். 

இவ்வாறு இடம்பெற்ற மோசடியினால் ஏற்பட்ட நஷ்டத்தில் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டிருக்க முடியும். எனினும் அரசாங்கம் அதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இது மாத்திரமின்றி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான மோசடிகள் எம்மால் வெளிப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் பாராளுமன்ற அமர்வு தினங்களையும் அரசாங்கம் குறைத்துள்ளது. கொவிட் பரவலைக் காரணம் காட்டி ஊடகவியலாளர்களுக்கும் பாராளுமன்ற அறிக்கையிடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியை பின்பற்றியே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் செயற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad