மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல் - 48 மணி நேர கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல் - 48 மணி நேர கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதி

இந்திய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை நந்திகிராம் விஜயத்தின் போது காயமடைந்ததால் எஸ்.எஸ்.கே.எம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது கணுக்கால் மற்றும் தோள்பட்டையில் எலும்புக் காயம் ஏற்பட்டுள்ளதை உறுதிபடுத்தியுள்ள வைத்தியர்கள், அவரை 48 மணி நேர கண்காணிப்பிலும் வைத்துள்ளனர்.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்ட சபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

சுவேந்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

இதற்காக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை மம்தா பானர்ஜி நேற்று தாக்கல் செய்தார். ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்த போது, அவரை 4, 5 பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன். அப்போது, 4, 5 பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னை சூழ்ந்து கொண்டு கார் கதவு நோக்கி தள்ளி விட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது என்றார்.

இந்நிலையில் தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள வைத்தியசாலை வட்டாரங்கள், “ஆரம்ப பரிசோதனையில் அவரது (மம்தா பானர்ஜி) இடது கணுக்கால், கால் மற்றும் காயங்கள், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

மேலும் மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் 48 மணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்” என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad