மின்னஞ்சல் ஊடாக மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் - 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 ஏ.டீ.எம். அட்டைகள் உட்பட பல கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

மின்னஞ்சல் ஊடாக மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் - 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 ஏ.டீ.எம். அட்டைகள் உட்பட பல கைப்பற்றல்

(செ.தேன்மொழி)

மின்னஞ்சல் கணக்குகளுக்குள் அத்து மீறி பிரவேசித்து மிகவும் சூட்சுமுகமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜையொருவரும் உள்நாட்டு சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் கூறுகையில், நைஜீரிய நாட்டு பிரஜைகளினால் இந்நாட்டு நபர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் மோசடிகள் தொடர்ந்தும் அதிகரிப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரும் இலங்கை பெண்ணொருவரை ஏமாற்றி 3 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மூன்று நைஜீரியர்கள் உட்பட இந்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்னுமொருவரின் மின்னஞ்சல் கணக்குகளுக்குள் அத்துமீறி பிரவேசித்து அந்த கணக்குளில் இடம்பெற்றுவரும் தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் ஊடாக 3 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக, நைஜீரிய நாட்டவர் ஒருவரும், இந்நாட்டைச் சேர்ந்த இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - நுகெகொட பகுதியில் வசித்து வந்த 35 வயதுடைய நைஜீரிய பிரஜை ஒருவரும், வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரும், மருதானை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் குறித்த நைஜீரிய பிரஜைக்கு இரண்டு மின்னஞ்சல் கணக்குகளை ஆரம்பித்து கொடுத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நைஜீரிய நாட்டு சந்தேகநபர் மிகவும் சூட்சுமமான முறையில் இன்னுமொருவரின் மின்னஞ்சல் கணக்குக்குள் பிரவேசித்து, அவர்களினால் அனுப்பப்படும் தகவல்களை முறைக்கேடாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கமைய, மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் நபரொருவர் அவரால் செய்து கொடுக்கப்பட்ட வேலையொன்றிற்கான ஊதியத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக, தனது வங்கி கணக்கிற்கு 9 இலட்சம் ரூபாய் பணத்தை வைப்பிலிடுமாறு, தன்னிடம் சேவையைப் பெற்றுக் கொண்ட இந்நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு நபருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இவ்வாறு தனக்கான சேவையைப் பெற்றுக் கொண்ட நபர் தற்போது, பிரான்ஸில் தொழில் புரிந்து வருவதுடன், தனக்கு தகவல் கிடைத்தவுடன் அதிலிருந்த வங்கி கணக்கிலக்கத்திற்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை அவர் வைப்பிலிட்டுள்ளார். ஆனால், இந்த மின்னஞ்சலை அனுப்பும் சந்தரப்பத்தில் அதற்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள சந்தேகநபர் அதில் குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கிலக்கத்திற்கு பதிலாக வேறொரு இலக்கத்தை பதிவிட்டுள்ளதுடன், இந்த வங்கி கணக்குக்கே இந்த 3 இலட்சம் ரூபாய் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரான நைஜீரிய பிரஜை தங்கியிருந்த அறையிலிருந்து 22 போலி தேசிய அடையாள அட்டைகளும், 18 வங்கி கணக்கு புத்தகங்களும், 29 ஏ.டீ.எம். அட்டைகளும், மடிக்கணணி ஒன்று, 12 தொலைபேசிகளும் மற்றும் போலியாக பெற்றுக் கொள்ளப்பட்ட 3 இலட்சம் ரூபாய் பணத்தில், இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத் தொகையும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மின்னஞ்சல் ஊடாக பணக் கொடுக்கல்வாங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் இதுபோன்ற மோசடிகாரர்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad