விமான பயணச்சீட்டுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மை உள்ளது - வெளிநாடுகளிலிள்ள இலங்கையர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவர் : அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா - News View

Breaking

Post Top Ad

Friday, January 8, 2021

விமான பயணச்சீட்டுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மை உள்ளது - வெளிநாடுகளிலிள்ள இலங்கையர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவர் : அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் தற்போது வரையில் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களில் 61 ஆயிரத்து 750 ற்கும் அதிகமானவர்கள் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் 41 ஆயிரத்து 451 இலங்கையர்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

விமான பயணச்சீட்டு விலை சாதாரண நிலைமைகளை விடவும் அதிகமாக உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கான மாற்று வழிமுறை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, 27/2 இல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கொவிட்-19 வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதற்கு பதில் தெரிவிக்கும் போது அமைச்சர் இவற்றை கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 2020 பெப்ரவரி மாதத்தில் வூஹான் மாகாணத்தில் இருந்து இலங்கை மாணவர்களை வரவழைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்து தற்போது வரையில் 61 ஆயிரத்து 750 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் 137 நாடுகளில் இருந்து 69 ஆயிரம் பேர் இலங்கைக்கு வர தயாராக உள்ளனர், அவர்களில் 15 நாடுகளில் இருந்து 41 ஆயிரத்து 451 இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் வீசா முடிந்தவர்கள், சட்டவிரோதமாக சென்றவர்கள் மற்றும் தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, இம்மாதம் 10 ஆம் திகதியில் இருந்து வார நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு விமானம் என்ற ரீதியில் வெளிநாட்டவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அது தவிர்ந்து அட்டவணைக்கு அமைய பணிக்கும் விமானங்களில் ஒரு விமானத்தில் 70 இலங்கையர்கள் என்ற ரீதியிலும் வரவழைக்கப்படுவர். இவ்வாறு ஒரு நாளைக்கு 10 விமானங்கள் என்ற ரீதியில் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல் தற்போது விமான பயணச்சீட்டுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மை உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம், அது குறித்து நான் இலங்கை விமான சேவைகள் திணைக்களம் மற்று எயார் லங்கா நிறுவனத்திடம் வினவியபோது அவர்கள் எனக்கு கூறிய பதில் என்னவென்றால் "கொவிட் வைரஸ் பரவலுக்கு முன்பிருந்த நிலைமையை போன்று அதிகளவில் பயணிகள் வருகை தராத காரணத்தினாலும் விமான நிருவனங்களுடம் வர்த்தக போட்டியில் உள்ள பின்னடைவுகள் என்ற காரணத்தினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது' என்ற பதிலை கூறினர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவர், ஆனால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது குறித்து எந்தவித சுகாதார வழிகாட்டலும் எமக்கு வழங்கப்படவில்லை. இதில் எவரையும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் தனிமைப்படுத்தல் முகாம்களில் கண்டிப்பாக 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். 

ஹோட்டல்களில் தங்கியிருக்க விரும்பும் நபர்கள் தாம் விரும்பிய ஹோட்டல்களில் தனிமைப்படுத்த கோரவும் முடியும். எவ்வாறு இருப்பினும் அளவுக்கு அதிகமானவர்களை அரச தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைக்க முடியவில்லை என்ற நெருக்கடி நிலைமை எமக்கு உள்ளது. அடுத்த இரண்டு அல்லது இரண்டறை மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad