150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க நீதி அமைச்சர் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க நீதி அமைச்சர் நடவடிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

பொதுமக்களுக்கு சட்டத்தை நெருக்கமாக்குவதற்கும் பொலிஸாரினால் பெற்றுக் கொடுக்கப்படும் சேவையை மேலும் செயற்திறமையாக்கும் நோக்கிலும் 150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்க நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்விடம் மேற்கொண்ட கோரிக்கைக்கமைய பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு சட்ட ரீதியிலாக வழங்கப்படும் சேவையை மேலும் செயற்திறமையுடன் வழங்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்துக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக சட்டத்தரணிகள் 150 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நீதி அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ராேஹண, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ருவன் குணசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமன்தி பீரிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில், 150 சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததுடன் அவர்களுக்கு நேர்முகப் பரீட்சை மேற்கொள்ளப்படும். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள், அவர்களுக்கு இருக்கும் திறமையின் பிரகாரம் பதவி உயர்வுகளை பெற்றுக் கொள்ள முடியுமாகின்றது.

இவ்வாறு இணைத்துக் கொண்ட பின்னர் அவர்களை 9 மாகாணங்களுக்கும் சேவைக்கு இணைத்துக் கொள்ள இருப்பதுடன் அவர்களுக்கு சட்டம் மற்றும் பொலிஸ் சேவை தொடர்பில் விசேட பயிற்சி ஒன்றையும் பெற்றுக் கொடுக்க இருக்கின்றோம். அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.

அத்துடன் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்கப்படும் இந்த சட்டத்தரணிகள் தமிழ் மொழி தொடர்பில் விசேட அறிவை பெற்றிருப்பதை விசேட தகுதியாக கருதப்பட வேண்டும். 

அதன் மூலம் தமிழ் மொழியை பேசும் மக்களை வெற்றி கொள்ள முடியுமாகின்றது. பொதுமக்களுக்கு சட்டத்தை நெருக்கமாக்குவதற்கும் பொலிஸாரினால் பெற்றுக் கொடுக்கப்படும் சேவையை மேலும் செயற்திறமையாக்குவதுமே இதன் நோக்கமாகும் என்றார்

No comments:

Post a Comment