பாராளுமன்றத்தில் பலருக்கு தொற்று ஏற்பட்டால் சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - பாடசாலைகளை ஆரம்பிக்க உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் : திஸ்ஸ அத்தனாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

பாராளுமன்றத்தில் பலருக்கு தொற்று ஏற்பட்டால் சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - பாடசாலைகளை ஆரம்பிக்க உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் : திஸ்ஸ அத்தனாயக்க

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக்கூட பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொவிட் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் பலவீனத்தையும் ஜனாதிபதியின் குறைபாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இவ்வாறு சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு அந்த குறைபாடுகளை நீக்கிக்கொள்ள வேண்டுமே தவிர கருத்தை தெரிவித்தவருக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது.

ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் சிவில் நிர்வாகத்திலிருந்து விலகி நாடு இராணுவ நிர்வாகத்தை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகிறது. 

ஜனாதிபதியின் இந்த கருத்தினை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கிறது. நாட்டின் தலைவரொருவர் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவிப்பது பொறுத்தமற்றது. இவ்வாறான குணாதிசயம் தலைமைத்துவ பண்பிற்கும் பொறுத்தமானதல்ல.

கொவிட் தொற்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக்கூட பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமானது பொருளாதாரம், நிர்வாகம் என்பவற்றில் மாத்திரமின்றி கொவிட் கட்டுப்பாட்டிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. 

கொவிட் தொற்று உறுதி செய்யப்படுவது சாதாரண விடயமாகும் என்றும் அதனால் பாராளுமன்றத்தை முழுமையாக மூட வேண்டிய தேவை கிடையாது என்றும் சபாநாயகர் கூறியிருக்கிறார்.

பாராளுமன்றத்தை முழுமையாக மூடாமல் அதன் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடும் கூட. ஆனால் அங்கும் பலருக்கு தொற்று ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது ? சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகளே அதனை பொறுப்பேற்க வேண்டும். முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாராளுமன்றத்தினுள் பாரதூரமான நிலைமையே ஏற்படும்.

கட்சி ரீதியான உத்தியோகபூர்வ தீர்மானங்களை எடுக்கும்போது முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு ஆகிய இரண்டையும் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பதற்கும் இம்மாத இறுதிக்குள் மாவட்ட அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமக்கும் உடன்பாடிருக்கிறது. ஆனால் அதற்கு உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

காரணம் தற்போது கொவிட் பரவல் சமூகப்பரவலாக மாற்றடைந்து நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது. அதனால் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் காணப்படும் அச்சம் நீக்கப்பட வேண்டும். பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கும் மேலதிகமாக கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

இணையவழியூடாக கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அதன் காரணமாக மாணவர்களும் பெற்றோரும் பண நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். இவர்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள தனியார் வகுப்புக்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ள கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிதி இல்லை என்று கூற முடியாது. காரணம் கொவிட் தொற்றிற்காக பல்வேறு வகையில் நிதியுதவிகள் நன்கொடை என்பன அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன. 

இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுவதற்கு பல பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. அது தற்போது அநாவசியமான செலவாகும்.

சீனிக்கான வரி குறைக்கப்பட்ட போதிலும் அதன் பயன் மக்களை சென்றடையவில்லை. மாறாக மொத்த விற்பனையாளர்கள் பாரிய நன்மையைப் பெற்றுக் கொண்டனர். மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு இன்றியே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் பொறுப்பினை உணர்ந்தால் உடனடியாக கொவிட் தொற்றிற்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment