வரவு செலவுத் திட்டத்தில் பாமர மக்களுக்கு நிவாரணங்களும், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை - எம். உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

வரவு செலவுத் திட்டத்தில் பாமர மக்களுக்கு நிவாரணங்களும், அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை - எம். உதயகுமார்

வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்துக்கும் அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. இந்த வேறுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டமானது துண்டுவிழும் தொகையில் உள்ளது. இது அப்பாவி பொதுமக்களின் மேல் சுமத்தப்படும் சுமை என்ற அச்சம் எழுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அந்த விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றும் போது, கொவிட் 19 வைரசியினால் விழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எந்த விதமான நிரந்தர தீர்வும் இங்கு முன்வைக்கப்படவில்லை. 

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பாமர மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் இல்லை. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை மற்றும் மலையக மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான எந்த விடயங்களும் இதில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவற்றை மூடி மறைப்பதற்காக சம்பள உயர்வு முன்மொழிவை மட்டுமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கி இருக்கிறார்கள். இந்த சம்பள உயர்வு முன்மொழிவும் வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக கொடுக்க முடியாது. இது ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். 

இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் நாணய மதிப்பு போன்றவற்றுடன் ஒப்பிடும்போது 1,300 ரூபா வழங்கப்பட வேண்டும். ஆகவே இதனைத் தாண்டி இன்னும் ஆயிரம் ரூபாவில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். 

ஆகவே பிரதமர் உறுதியளித்த படி அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்பட வேண்டும். ஏனென்றால் பிரதமர் இந்த சபையிலேயே கூறிய பிறகு பெருந்தோட்ட கம்பனிகள் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்கள் எனவே பிரதமர் நேரடியாக தலையிட்டு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment