ஏறாவூரைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரியைக் காணவில்லை - பயணம் செய்த வாகனம் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

ஏறாவூரைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரியைக் காணவில்லை - பயணம் செய்த வாகனம் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

பழைய இரும்புப் பொருட்களை சேகரித்து விற்கும் வியாபாரி ஒருவரைக் காணவில்லை என்றும் அவர் பயணம் செய்த வாகனம் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், மீராகேணி மைய்யித்துப்பிட்டி, சமூர்த்தி வீதியை அண்டி வசிக்கும் நெய்னா முகம்மது நூகுலெப்பை (வயது 52) எனும் 5 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 30.08.2020 அன்று அதிகாலை 5 மணியளவில் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி வருவதற்காக ரூபாய் 30000 (முப்பதாயிரம்) பணத்துடன் வீட்டை விட்டுச் சென்றவர் இன்று வரை திரும்பி வரவே இல்லை என்று அவரது மனைவி கச்சிமுஹம்மது சித்தி பரீதா பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது கணவர் பயணித்த படி ரக வாகனம் சேதமாக்கப்பட்டு அதன் பற்றரி கழற்றப்பட்டு சவுக்கடி வீதியில் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாக திங்கட்கிழமை 31.08.2020 தனக்கு தகவல் கிடைத்ததையடுத்து தான் அந்த வாகனத்தை மீட்டெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக திங்கள்கிழமை 31.08.2020 ஏறாவூர் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டுக்கமைவாக தாம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad