அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கோரிக்கை

முழு உலகையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. அரசாங்கம் நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அதேநேரத்தில் தேர்தலை மட்டும் முன்னர் அறிவித்த நேரத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. தற்போதைய ஆபத்தான சூழல் நாடு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பொருத்தமானதல்ல. எனவே அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு.

கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயானது இலங்கை உட்பட உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் தகவல்களின்படி ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், ஏறத்தாழ நாற்பத்தி மூன்று பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. 

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருவோர் மிக நீண்ட தூரங்களில் உள்ள பரிசோதனை முகாம்களில் வைத்துக் கண்காணிக்கப் படுகின்றனர். தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 

பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகள், பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகளும் ஏனைய பொழுதுபோக்கு நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளன. 

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ளும்படி மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

16.03.2020 திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் மூன்று நாட்கள் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையேற்பட்டால் இந்த விடுமுறை மேலும் நீடிக்கப்படும் என்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் விசேட வர்த்தமானி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டங்கள் கூடுவதற்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இயன்றவரை மக்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்குமாறு அரச நிர்வாகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளால் அச்சமுற்ற மக்கள், தமக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மிக அதிகளவில் கொள்வனவு செய்வதன் மூலம் பல கடைகளும் பொருட்களின்றி வெறிச் சோடிக்கின்றன. 

மக்களும் இந்த எதிர்பாராத செலவின் காரணமாக பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அச்ச சூழ்நிலை இருந்தபோதும்கூட, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சார்க் நாட்டு தலைவர்களுடனான காணொளி கலந்துரையாடலில் இலங்கையில் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் 5000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. விமானங்கள் நிறுத்தப்படுகின்றன, விமான நிலையங்கள் மூடப்படுகின்றது. போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகின்றது. இலங்கை அரசாங்கமும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கொள்ளை நோய் போன்று உருவாகியிருக்கக் கூடிய இந்த கொரோனா வைரஸ் எனப்படும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. ஆனால், இவ்வாறான மோசமான சூழ்நிலைக்குள் தேர்தல் நடத்த முடியுமென்று ஜனாதிபதி எவ்வாறு உத்தரவாதமளிக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. 

கூட்டம் கூட முடியாது. மக்களுடன் பேச முடியாது. சுவரொட்டிகள் ஒட்ட முடியாது. ஒலி பெருக்கிகள் பாவிக்க முடியாது. இவ்வாறான கட்டுப்பாடுகள் மத்தியிலும் இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் எந்தவொரு பகுத்தறிவு உள்ள அதிகாரியோ அரசியல்வாதியோ தேர்தலை நடாத்தும்படி வற்புறுத்த மாட்டார்கள். 

ஒரு நீதியான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமாக இருந்தால், அரசியல் கட்சிகளோ சுயேட்சைக் குழுக்களோ மக்களுடன் தங்களது கொள்கைகளை கருத்துக்களை கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும். அதற்கான தகுந்த சந்தர்ப்பம் இதுவல்ல என்பதை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளுவர். 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் என்பது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு சாதாரண சூழல் ஏற்படும் வரை இந்தத் தேர்தலை ஒத்தி வைப்பதே புத்திசாலித்தனமானது. இதனை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைவரும் சீர்தூக்கிப் பார்க்கும்படி பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad