தடைப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமானது - முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

தடைப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமானது - முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்

“நான் முதலமைச்சாராக இருந்த காலப்பகுதியில் ஏறாவூர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு செயல்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாத நிலையில் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு பிரதான காரணம் நீதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறாமையாகும். இந்நிலையை மாற்றி அமைத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதற்காக பிரதேச மக்கள் ஒரணியாக அணி திரள வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட். அழைப்பு விடுத்தார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது ஏறாவூர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்டி வியாபாரிகளின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தபோது கூறியதாவது பிரதேச மக்களின் கருத்துகளை துல்லியமாக வெளிப்படுத்தும் சிறந்த தொடர்பாளர்களாக நீங்களே இருக்கின்றீர்கள். உங்களிடம் பலரும் பல வகையான தமது எண்ண நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவர். மக்கள் கருத்துகளை அறிய வேண்டுமாயின் உங்களைத் தொடர்பு கொண்டாலே சிறப்பாகும் என்பது என் எண்ணமாகும். 

இந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஏன் வருடங்களாக எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் ஆட்சி அதிகாரமற்ற ஒரே ஒரு காரணத்தால் முடங்கிக்கிடப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையை நாம் மாற்றி அமைக்க வேண்டும். 

ஏறாவூர் பிரதேசத்தில் எமது தனிப்பட்ட முயற்சியின் காரணமாக மூன்று தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் மூலமாகப் பலருக்கும் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தற்போது மிகப் பிரமாண்டமான தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 900 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான தொழில் வாய்ப்புகள் பெருகும்போதுதான் மக்களிடம் பொருளாதார ரீதியான மேம்பாடு ஏற்படுகின்றது. மக்களிடம் பொருளாதார மாற்றம் ஏற்பட்டால் அதன் பலன் உங்களையும் வந்தடைகின்றது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. 

எதிர்காலத்தில் இவ்வாறான பொருளாதார மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டியது அவசியமானது. இதற்காக நாம் எமது அதிகார சக்தியை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானது என்றார்.

மேற்படி சந்திப்பில் ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.ஏ.நஸார் மற்றும் பாடசாலை அதிபர் எம்.எம்.ஜலால்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad