வவுனியா பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : கல்வியமைச்சு, UGC, பல்கலைக்கழக சமூகம் தனித்தனியே குழுக்கள் அமைத்து விசாரணைகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 4, 2025

வவுனியா பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : கல்வியமைச்சு, UGC, பல்கலைக்கழக சமூகம் தனித்தனியே குழுக்கள் அமைத்து விசாரணைகள்

லோரன்ஸ் செல்வநாயகம்

வவுனியா பல்கலைக்கழக மாணவரின் மரணம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், உயர் கல்வியமைச்சும் தனித்தனியே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்ற 23 வயதுடைய மாணவர் ஒருவர், கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனையில், மது அருந்தியதால் ஏற்பட்ட வாந்தியே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மது அருந்தியதற்கான காரணம் நிச்சயமற்றதாகக் காணப்படும் நிலையில், அதனை உறுதிப்படுத்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த மாணவர் அநுராதபுரம், ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் அற்புதராஜா தெரிவித்ததுள்ளார்.

பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மேற்படி மாணவரின் மரணம் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கும் அத்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சின் குழுவிடம் இது தொடர்பில் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயது மாணவர் ஒருவர், சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், அவர் பகிடிவதையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களில் வௌிவரும் தகவல்களின்படி, சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்ததாக வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதே வேளை, வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தின் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திடீர் சுகயீனம் காரணமாக குறித்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

No comments:

Post a Comment