(இராஜதுரை ஹஷான்)
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க தயாரென, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற அரச நிதி பற்றிய குழுவில் முன்னிலையானபோது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் நிதி கொள்கை,பணவீக்கம் அல்லது அந்நிய செலாவணி தொடர்பில் கேள்வி எழுப்பினால், பொதுவாகவே அவற்றுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. பாராளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லாதுள்ளமையே இதற்கான காரணம்.
இதற்கு பதிலளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி கொள்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிதியமைச்சரிடமே நேரடியாக கேள்வி கேட்பார்.
எழுப்பப்படும் கேள்விகள் குறித்து நிதியமைச்சர் எம்முடன் கலந்துரையாடுவார். தேவைப்படும் பதிலுக்கான கேள்வி ஒருநாளைக்கு முன்னதாகவே எமக்கு கிடைக்கப் பெறும். முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு எவ்வழியிலாவது பதிலளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். விடைகளை நிதியமைச்சருக்கு அனுப்பி வைப்போம். இதுவே பின்பற்றப்படும் வழிமுறை.
நிதியமைச்சர் ஊடாக அனுப்பி வைக்கப்படும் சகல கேள்விகளுக்கும் உரிய காலப்பகுதியில் நாங்கள் பதிலளித்துள்ளோம் என்பதை என்னால் உறுதியாக குறிப்பிட முடியும்.
முன்வைக்கப்படும் ஒருசில கேள்விகள் மத்திய வங்கிக்கு மாத்திரம் உரித்தானது அல்ல, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி, அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறும் விடைகளை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சர் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விடைகளை வழங்குவார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க எமக்கு அழைப்பு விடுத்தால், பாராளுமன்றத்துக்கு வருகைத் தருவதற்க்கு எமக்கு பிரச்சினையேதும் இல்லை என்றார்.

No comments:
Post a Comment