காசாவில் இரண்டு ஆண்டு காலம் நிலைமாற்ற அரசு ஒன்றை அமைப்பது மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா வரைந்திருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வாரத்தில் சில நாடுகளிடையே பகிரப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் மாற்றங்களுக்கு உட்படக் கூடியாதாக உள்ளது. எனினும் இது இன்னும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 15 உறுப்பு நாடுகள் இடையே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோன்று இந்தத் திட்டம் எப்போது செயற்படுத்தப்படும் என்பதும் உறுதியாகவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா திட்டம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளுடனும் மற்ற தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர்கள் ஒருவர் குறிப்பிட்டபோதும் ‘கசிந்திருக்கும் இந்த புதிய ஆவணங்கள்’ தொடர்பில் கருத்துக் கூற அவர் மறுத்துள்ளார்.
இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம், ‘அமைதிக்கான சபை’ எனப்படும் நிலைமாற்று அரசுக்கு காசாவில் ஒரு தற்காலிக சர்வதேச படையை அமைக்கும் அதிகாரத்தை வழங்கும். அந்தப் படை தனது பொறுப்புகளை நிறைவேற்ற ‘அனைத்துத் தேவையான நடவடிக்கைகள்’, அதாவது, தேவையானால் படை வலிமையையும் பயன்படுத்த அனுமதிக்கப்படும், என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச படைக்கு பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான உதவியை செயற்படுத்துவது, இஸ்ரேல், எகிப்துடனான எல்லை பகுதிகளின் பாதுகாப்புக்கான பணிக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
அதேபோன்று புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட பலஸ்தீன பொலிஸ் படைக்கும் இந்த சர்வதேச படை பொறுப்பாகும். இந்த சர்வதேசப் படை அரசு சாராத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைவது மற்றும் தேவைப்பட்டால், ஆயுதங்களை நிரந்தமாக ஒழிப்பது உட்பட காசாவில் பாதுகாப்பை நிலைநிறுத்தும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரப்பின் 20 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் இடையே இணக்கம் எட்டப்பட்டது. இந்த போர நிறுத்தம் காசாவில் இரண்டு ஆண்டுகள் நீடித்த போருக்குப் பின்னர் இடம்பெற்றதோடு இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழிவகுத்தது.
ஐ.நா. தீர்மான வரைவின் மூலம் அங்கீகரிக்கப்படும் இரண்டாம் கட்டத்த்தில் காசாவில் இந்த நிலைமாற்று அரசு நிறுவப்பட்டு சர்வதேச படை ஒன்று நிலைநிறுத்தப்படவுள்ளது.
டிரம்பின் திட்டத்தின்படி காசாவில் ஹமாஸ் அரசு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்த அமைப்பின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. எனினும் ஆயுதக் களைவுக்கு அந்த அமைப்பு இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை.
எகிப்து மற்றும் இஸ்ரேலுடன் நெருக்கமான ஆலோசனையின் பேரில், திட்டம் மற்றும் படைகள் குறித்த விரிவான ஒப்பந்தங்கள் எட்டப்பட்ட பின், இந்த சர்வதேச படை நிலைநிறுத்தப்படும் என்று இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் காசாவுக்கு அமெரிக்க படைகளை அனுப்புவதை டிரம்ப நிர்வாகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. இந்தப் பன்னாட்டுப் படையில் இந்தோனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, கட்டார், துருக்கி மற்றும் அசர்பைஜான் நாடுகளின் படைகளை இணைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் நிலைநிறுத்தப்படும் அரபு மற்றும் சர்வதேச படைகள் தொடர்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. துருக்கி படையை காசாவில் நிலைநிறுத்துவதற்கு இஸ்ரேல் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
காசாவில் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் மற்ற நிதி நிறுவனங்களுக்கு வரையப்பட்டிருக்கும் ஐ.நா தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கக்கத்திற்காக நிதியம் ஒன்றை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தீர்மானம் பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் காலம் பற்றி உறுதி செய்யப்படவில்லை. தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா அல்லது சீனாவின் எதிர்ப்பு இன்றி குறைந்தது ஒன்பது ஆதரவு வாக்குகளை பெற வேண்டும்.
எவ்வாறாயினும் காசாவில் தற்போது அமுலில் இருக்கும் பலவீனமான போர் நிறுத்தம் அடிக்கடி மீறப்பட்டு வருவதோடு இஸ்ரேல் போர் நிறுத்தத்தையும் மீறி அங்கு நடத்தி வரும் தாக்குதல்களில் சுமார் 250 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment