போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் தொடர்ந்து அதிகரித்து வரும் பலஸ்தீனர்களின் உயிரிழப்புகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 6, 2025

போர் நிறுத்தம் அமுலில் இருந்தும் தொடர்ந்து அதிகரித்து வரும் பலஸ்தீனர்களின் உயிரிழப்புகள்

காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோது அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 68,875 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

காசா மருத்துவனைகளுக்கு மிக அண்மையில் மூன்று சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரு உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருப்பதோடு மற்றொருவர் அண்மைய தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்று காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. 

எனினும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை போர் இல்லாதபோதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் அங்குள்ள கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் கடந்த புதன் மாலையும் செல் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

மத்திய காசாவின் புரைஜ் அகதி முகாமில் விறகுகளை சேகரித்துக் கொண்டிருந்த குடியிருப்பாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டதாக அல் அவ்தா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இதேவேளை காசா நகரின் கிழக்கே இஸ்ரேலின் தாக்குதல்களால் சேதம் அடைந்த கட்டடம் ஒன்று இடிந்து நேற்று ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சேதத்திற்கு உள்ளான பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசித்து வருவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காசாவில் இஸ்ரேலிய படை நிலைகொண்டிக்கும் மஞ்சள் கோட்டை தாண்டி வந்ததாக இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி ஹமாஸ் முழுமையாக அயுதங்களை களைந்தாலேயே இந்த மஞ்சள் கோட்டை விட்டு வாபஸ் பெறுவதாக இஸ்ரேல் கூறுகிறது. எனினும் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவதை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

முதல் கட்ட போர் நிறுத்தத்தின்படி காசாவில் தடுத்து வைக்கப்பட்ட உயிருடன் இருந்த 21 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்ததோடு உயிரிழந்த 28 பணயக் கைதிகளின் உடல்களில் 22 உடல்களை கையளித்துள்ளது. 

கடைசியாக கடந்த புதன்கிழமை மேலும் ஒரு பணயக்கைதியின் உடலை ஹமாஸ் கையளித்திருந்தது. மற்ற பணயக்கைதிகளின் உடல்களை இடிபாடுகளில் தேடி வருவதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவுக்கான உதவிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. அங்கு தினசரி சுமார் 100 உதவி லொறிகளே செல்வதாகவும் அது எந்த அடிப்படைத் தேவைகளும் இன்றி உள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் தொண்டு அமைப்புகள் கூறி வருகின்றன.

காசாவில் கடந்த மாதம் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் அந்தப் பகுதிக்கு 4,453 உதவி லொறிகளே வந்திருப்பதாகவும் அது இந்தக் காலப்பகுதிக்கு எதிர்பார்க்கப்பட்ட 15,600 உதவி லொறிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான எண்ணிக்கை என்றும் காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக முட்டை, இறைச்சி, மீன், பால் உற்பத்திகள் மற்றும் மரக்கறிகள் உட்பட 350 இற்கு அதிகமான அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் முடக்கி இருப்பதோடு அதற்கு பதில் மென் பானங்கள், சொக்கலேட் மற்றும் சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களுக்கே அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காசா போரை அடுத்து ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்ததோடு அங்கு இஸ்ரேலிய படை நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளின்போது நடத்தப்பட்ட இரு வெவ்வேறு தாக்குதல்களின்; பலஸ்தீன சிறுவன் மற்றும் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

ரமல்லாவில் வீடு ஒன்றுக்குல் நுழைந்த இஸ்ரேலியப் படை தாக்குதல்களில் ஈடுபட்டபோதும் அந்த வீட்டில் இருந்த 80 வயது பெண்; ஒருவர் அதிர்ச்சியில் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

பிறிதொரு சம்பவத்தில், ஜெனின் நகரின் மேற்கே உள்ள அல் யூமும் சிறு நகரில் இஸ்ரேலியப் படை நடத்திய சுற்றிவளைப்பில் 15 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

No comments:

Post a Comment