ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின் 17வது குழுவின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, தற்காலிக அடிப்படையிலாவது தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொண்டு ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தியது.
2023 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள், ருஹுணு இணை சுகாதாரப் பீடத்திற்குத் தெரிவாகி ஒரு வருடத்திற்கும் அதிக காலம் கடந்தும், இணை சுகாதாரப் பீடத்தில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையின் காரணமாக, இதுவரை அந்த மாணவர் குழுவினருக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியவில்லை என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தலைமையில் 30.10.2025 அன்று பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக அதிகாரிகள், ருஹுணு இணை சுகாதாரப் பீடத்தில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை குறித்து குழுவிடம் தகவல்களைச் சமர்ப்பித்தனர். எவ்வாறாயினும், தங்களுக்குத் தேவையான மனித வளத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக 250 மாணவர்கள் கொண்ட குழுவினர் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க தற்காலிக அடிப்படையிலாவது தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அதன்படி, கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இணை சுகாதாரப் பீடத்தின் 17வது குழுவின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு என்பவற்றின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மற்றும் 31.12.2025 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் ஆகியவையும் அன்றையதினம் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன.
இதன்போது, சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை பொதுவாகப் பாதிக்கும் பல சிக்கலான சூழ்நிலைகள் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை அடைய முடியவில்லை என்று அமைச்சுக்களின் செயலாளர்கள் சுட்டிக்காட்டினர்.
கொள்வனவு செயன்முறை மற்றும் கட்டட நிர்மாணத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைய முடியவில்லை என்றும், இந்த ஆண்டில் இன்னும் குறுகிய காலமே உள்ளதால், சம்பந்தப்பட்ட முன்னேற்றத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா, சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட ஆகியோரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர், இணை சுகாதாரப் பீடத்தின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.
.jpg)
No comments:
Post a Comment