எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறு 14 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல் வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கருத்திட்டங்களான Windscape Mannar (Pvt) Ltd இன் 20 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் Hayleys Fentons இன் 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளாக, வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:
Post a Comment