இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளின் அடாவடி தொடர்கிறது - ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Monday, November 17, 2025

இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளின் அடாவடி தொடர்கிறது - ரவிகரன் எம்.பி

ஈழத் தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தகைய பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளின் தொடர்சியாகவே திருகோணமலையில் இடம்பெற்ற புத்தர்சிலை அமைக்கும் செயற்பாடும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் 17.11.2025 இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நீதி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையின் தலைவர் அவர்களே, போருக்குப் பிறகான காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு துறைகள் தோறும் கிட்டாத ஒரு விடயத்திலான விவாதத்திலேதான் இன்று நாமெல்லாம் கலந்துகொண்டிருக்கிறோம்.

வென்றவன் பக்கமே வரலாறு சாயும் என்பதையும் வெல்பவன் சொல்வதே வரலாறாகும் என்பதையும் இனவாதம் பழுத்துப்போயுள்ள மாறிவரும் அரசுகளின் செயல்கள் காட்டுகின்றன.

முல்லைத்தீவில் குருந்தூர் மலை, நெடுங்கேணியில் வெடுக்குநாறி மலை, யாழ்ப்பாணத்தில் தையிட்டி, நேற்று திருகோணமலையில் சிறி சம்புத்த ஜயந்தி போதிவர்த்தன விகாரை.

ஈழத் தமிழர்களின் பூர்வீக இடமெல்லாம் சட்டம் மௌனிக்க, அரச இயந்திரங்கள் காவல் காக்க, தமிழர்களை அடித்தும் அச்சுறுத்தியும் தடுத்தும் அறத்தைக் கொன்று விகாரைகள் எழும்புகின்றன.

பேரினவாத அடக்குமுறைக்குள் தமிழர்களுக்கு கிட்டாத ஒன்றைப் பற்றிய விவாதத்திலே இன்று கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் மக்களின் சார்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் இத்தகைய நீதிக்குப் புறம்மான பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment