ஜே.வி.பி எனும் புதிய போத்தலில் பழைய வைன் : மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் - காவிந்த ஜயவர்தன தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 10, 2025

ஜே.வி.பி எனும் புதிய போத்தலில் பழைய வைன் : மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் - காவிந்த ஜயவர்தன தெரிவிப்பு

பழைய வைன் ஜே.வி.பி எனும் புதிய போத்தலில் ஊற்றப்பட்டுள்ளதைப் போன்றே அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் தஞ்சமடைந்துள்ளார்கள். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பழைய வைனை புதிய ஜே.வி.பி போத்தலில் அடைத்து கொடுப்பதைப் போன்றே இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியபோது ஜே.வி.பியினர் அதற்கு எதிராக வீதிக்கு இறங்கி கொலைகளை செய்து, அரச சொத்துக்களை அழித்து, இளைஞர்களை கொலை செய்து வன்முறையில் ஈடுபட்டார்கள்.

2022 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்ற வேளையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சியினராகிய நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அப்போது மக்கள் விடுதலை முன்னணியினர் சர்வதேச நாணய நிதியம் மரண பொறியே என்றும், அதன்படி செயற்பட முடியாது. நாங்கள் கூறுவதன்படி எமது யோசனைக்கு அமைய கடனை வழங்குங்கள் இல்லையென்றால் கடன் தேவையில்லை என்று கூறினர்.

இதேவேளை மக்களை ஏமாற்றி, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை திருத்தியமைப்போம் என்ற பொய் வாக்குறுதிகளை வழங்கி இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தொடர்பான விவாதத்தின்போது தற்போதைய ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் உள்ளிட்டோர் அதற்கு எதிராகவே வாக்களித்தனர்.

இப்போது இவர்கள் அன்று எதிர்த்த வேலைத்திட்டங்களை மிகவும் அழகாக முன்னெடுத்துச் செல்கின்றனர். அன்று இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கூறினர். இன்று இவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகின்றனர்.

நீங்கள் இன்று வெற்றிகரமான வரவு செலவுத் திட்டம் என்று கூறுகின்றீர்கள் என்றால் அன்று தோல்வியடைந்த திட்டம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை கூறினீர்கள். நீங்கள் பொய்களை கூறி மக்களை ஏமாற்றியுள்ளீர்கள் என்றார்.

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

No comments:

Post a Comment