போர் நிறுத்த காலத்தில் 241 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு : மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை கையளித்தது ஹமாஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, November 10, 2025

போர் நிறுத்த காலத்தில் 241 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு : மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை கையளித்தது ஹமாஸ்

காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. மறுபுறும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையிலும் இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தினசரி இடம்பெற்று வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகள் நீடித்த காசா போரில் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. 

இவ்வாறு மீட்கப்பட்ட ஆறு உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இடிபாடுகளில் சிக்கி இருக்கும் உடல்களை அம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களால் மீட்க முடியாத நிலை இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

தெற்கு காசா நகரான கான் யூனிஸ் மற்றும் வடக்கே ஜபலியா நகரில் இஸ்ரேலின் பீராங்கி தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கான் யூனிஸின் கிழக்காக பானி சுஹைலா சிறு நகரில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதலில் 241 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது மாத்திரமன்றி மேலும் 619 பேர் காயமடைந்திருப்பதோடு இடிபாடுகளில் இருந்து 528 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தள்ளது.

இதன்படி காசாவில் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்ைக 69 ஆயிரத்தைத் தாண்டி 69,176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 170,960 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை ஹமாஸ் அமைச்சு மற்றொரு இஸ்ரேலியப் படை வீரரின் உடலை கையளித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஹாதர் கோவல்டின் என்ற வீரரின் உடலையே ஹமாஸ் நேற்று கையளித்தது. கொல்டினின் உடல் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரின்போது ஹமாஸின் அதிரடி தாக்குதலில் கோல்டின் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபரில் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி உயிருடன் இருந்த அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தது. அதற்கு பகரமாக இஸ்ரேல் சுமார் 2,000 பலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

இந்த உடன்படிக்கையின்படி 360 போராளிகளின் உடல்களுக்கு பகரமாக உயிரிழந்த 28 பணயக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டி உள்ளது. இதுவரை 23 பணயக் கைதிகளின் உடல்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் டுபாஸ் சிறு நகரின் தெற்கே உள்ள பாரா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நடத்திய சுற்றிவளைப்பின்போது பலஸ்தீன இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு அந்த முகாமுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை சூடு நடத்த ஆரம்பித்தபோது 26 வயது அப்தல் ரஹ்மான் டரவ்ஷா என்ற இளைஞன் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில் சுமார் 50 பேர் கொண்ட இஸ்ரேலிய குடியேறிகள் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்திற்கு அருகே உள்ள ஜபா கிராமத்தின் கிழக்கு பகுதியில் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் ஏழு பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாக வபா தெரிவித்தது. இதன்போது அந்த குடியேற்றவாசிகள் தீவைப்புகளில் ஈடுப்பட்ட நிலையில் சொத்துகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட் பலஸ்தீன நிலப்பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்திருப்பதோடு அங்கு இஸ்ரேலியப் படைகள் அடிக்கடி சுற்றுவளைப்புகளை நடத்தி வரும் அதேநேரம் இஸ்ரேலிய குடியேறிகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment