அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, November 9, 2025

அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன. இந்த பேரணியில் நாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனைத்து விடயங்களையும் விமர்சிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. சிறந்தவற்றை வரவேற்போம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய தொழிற்றுறையை மேம்படுத்தும் திட்டங்கள் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது. இது ஒரு அநாவசியமான பேரணி என்றே குறிப்பிட வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன. பேரணிகள், போராட்டங்களினால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. நாங்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை.

எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கொள்கை ஏதும் கிடையாது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதாயின் முதலில் எதிர்க்கட்சிகளிடம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைத் திட்டம் ஏதும் இருத்தல் வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment