(செ.சுபதர்ஷனி)
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும், சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் சந்தேகநபரான சட்டத்தரணியை கைது செய்வதற்கு 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கும், சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின்போது பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து, பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடமையை செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாக சட்டத்தரணி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், சட்டத்தரணி பொலிஸாரிடமும், நீதிமன்றிலும் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment