(செ.சுபதர்ஷனி)
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளின் கட்டமைப்பில் ஒரு சில அடிப்படை வசதிகள் இன்றளவும் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. இதனால் வைத்தியசாலைகளுக்கு வருகைதரும் நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (24) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் விடுக்கப்பட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக, பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவை இலங்கையில் வழங்கப்படுவதாக, இந்நாட்டின் இலவச சுகாதார சேவை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பாராட்டப்பட்டுள்ளது.
எனினும் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஒரு சில அடிப்படை வசதிகள் இன்றளவும் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இதனால் நோயாளர்களுக்கு சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.
வைத்தியர்களின் சேவைக்கேற்ற சூழல் இல்லாமையால், பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வைத்தியர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு நம்பகமான திட்டம் கொண்டுவரப்படாத நிலையில் தொடர்ச்சியாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
வைத்தியசாலைகளின் சேவைத் தேவைகளுக்கு ஏற்ப வைத்தியர்களை பணியமர்த்துவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த வகையில் சுமார் 10 ஆயிரம் அரச வைத்தியர்களின் இடமாற்றம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அமைப்பிற்குள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் திருப்திகரமாக இல்லை. அடிப்படை உட்கட்டமைப்பு வசதி, சுகாதார வசதி மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, நோயாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஊழியர்களுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
எமது வைத்திய சங்க உறுப்பினர்களிடமிருந்து தொடர்ச்சியாக கிடைக்கப் பெறும் தகவல் மற்றும் புகார்களுக்கமைய, வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளில் உள்ள சிக்கல் மற்றும் குறைபாடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் இலவச சுகாதார சேவையை உருவாக்குவதில், மக்களின் வரிப் பணம் முதலீடு செய்யப்பட வேண்டும். காலப்போக்கில் நிலையான திட்டத்தின் மூலம் வைத்தியசாலை அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கமும் பொதுமக்களும் தலையிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

No comments:
Post a Comment