அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவலும் இவ்வாறுதான் உதாசீனப்படுத்தப்பட்டது - நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 24, 2025

அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவலும் இவ்வாறுதான் உதாசீனப்படுத்தப்பட்டது - நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள்தான் தோன்றுகின்றனர். அதனால்தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள்தான் தோன்றுகின்றனர். அதனால்தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

எவ்வாறிருப்பினும் நாமல் எனக்கூறும்போது தமது அரசாங்கத்திலுள்ள நாமலை மறந்து அவர்களுக்கு எனது நினைவு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும்.

நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் காணப்படுகிறது.

ஜனாதிபதி நடை பயிற்சியின்போது பாதுகாப்புடனேயே செல்கின்றார். அது சிறந்த விடயம். அதேபோன்று அவர் ஏனையோரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெலிகம பிரதேச சபை தலைவர் எழுத்து மூலம் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இரு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு நபருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் மீது முறைப்பாடுகள் உள்ளனவா? குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா? என்பதை ஆராய முன்னர் முதலில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறிருக்கையில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவருக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தலை பொலிஸ்மா அதிபர் எவ்வாறு உதாசீனப்படுத்த முடியும்? ஏன் அவருக்கான பதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின்போது கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலும் இவ்வாறுதான் உதாசீனப்படுத்தப்பட்டது. தமக்கு தேவையற்றவர்களின் பாதுகாப்பை ஸ்திரமற்றதாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த கோணத்தில் அவதானிக்கும்போது அரசாங்கத்தின் அனுசரனையுடன் திட்டமிட்ட குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான கொலைகள் இடம்பெறும்போது அரசாங்கம் பதற்றமடைகிறது.

323 கொள்கலன்கள் தொடர்பில் முதலாவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்த டான் பிரியசாத் கொல்லப்பட்ட போதும் அரசாங்கம் இவ்வாறுதான் செயற்பட்டது.

மரண விசாரணை அறிக்கை கிடைக்க முன்னரே, அமைச்சரொருவர் அவரது கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டார். அதேபோன்று தற்போது லசந்த கொலையை திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment