உரிய முறையில் விடுமுறை பெறாது பல்வேறு காரணங்களுக்காக முப்படைகளையும் சேர்ந்த 54087 அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் சேவையைக் கைவிட்டுச் சென்றுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விடுமுறை பெறாது கடமைக்கு சமுகமளிக்காத 385 இராணுவ அதிகாரிகளும் இராணுவத்தைச் சேர்ந்த 47265 ஏனைய உத்தியோகத்தர்களும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விடுமுறை பெற்றுக் கொள்ளாது கடமைக்கு சமுகமளிக்காத 46 விமானப் படை அதிகாரிகளும் 3396 விமானப்படை வீரர்களும் உள்ளதாக தெரிவித்த அவர், மேலும் 87 கடற்படை அதிகாரிகளும் கடற்படையைச் சேர்ந்த 3108 கடற்படையினரும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பிரகீத் மதுரங்க எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர்களில் விடுமுறை பெற்றுக் கொள்ளாது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள 232 இராணுவ அதிகாரிகளும் 93 இராணுவ வீரர்களும் 64 கடற்படை அதிகாரிகளும் 19 கடற்படை வீரர்களும் 15 விமானப்படை அதிகாரிகளும் 05 விமானப்படை வீரர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு எந்த விதத்திலும் பொது மன்னிப்பு வழங்க முடியாது. அவ்வாறு செய்தால் முப்படைகளிலும் தற்போது பணி புரியும் படைவீரர்களுக்கும் அது தவறான முன்னுதாரணமாக அமையும். இது தொடர்பில் முப்படைத் தளபதிகளும் விடயங்களை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள படை வீரர்கள் தொடர்பில், அந்தந்த படைகளின் நடைமுறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் நாடு திரும்பும்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் முற்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளில் உள்ளவர்கள் பல்வேறு குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக சபையில் தெரிவித்த அவர், அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படவம் அரசாங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment