பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா ? : பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கள் சிறப்புரிமை மீறலாகும் - எதிர்க்கட்சித் தலைவர் விசனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 29, 2025

பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா ? : பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கள் சிறப்புரிமை மீறலாகும் - எதிர்க்கட்சித் தலைவர் விசனம்

(எம்.மனோசித்ரா)

பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா ? அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா? பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றுமுழுதாக அவரது சிறப்புரிமைகளை மீறுபவையாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (27) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு மூலம் ஒரு பிரஜை என்ற ரீதியில் ஜகத் விதானவின் சிறப்புரிமைகளும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அவரது சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் சில நடவடிக்கைகள் அரசியல்மயமானவையாகவே காணப்படுகின்றன. சில விசாரணைகள் அரசியல் மற்றும் ஊடகக் காட்சிப்படுத்தல்களாக மாற்றப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் பிரச்சார கட்டமைப்பின் ஓர் தரப்பாக பொலிஸ்மா அதிபர் மாறிவிட்டார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

ஓர் மக்கள் பிரதிநிதியாக ஜகத் விதானவுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தனது கடமைகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கள் கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளன.

அவரது தவறான கருத்துக்கள் காரணமாக, ஒரு பிரஜை என்ற முறையிலும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் ஜகத் விதானவின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன. உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஜகத் விதான, அவை தொடர்பாக முறைப்பாட்டாளராக செயற்படும்போது அவரை குற்றவாளியாக அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டதா? அல்லது பாதுகாப்பை வழங்கும் பெரும் பொறுப்பை அரசியல்வாதிகள் தங்கள் கைகளில் எடுத்துள்ளனரா? ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்கிறோம்.

அரசாங்கம், பொலிஸ்மா அதிபர், சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட சகலரும் ஜகத் விதானாவின் பாதுகாப்பை உறுதி செய்து, அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்.

220 இலட்சம் நாட்டு பிரஜைகளுக்கு பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினது பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபர் கவனம் செலுத்தி, சகல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கிறேன். பல மாதங்களாக எழுத்துப்பூர்வ கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதால், பொலிஸ்மா அதிபருக்கு முறையான உத்தரவுகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.

ஜகத் விதான சிறந்த மக்கள் சேவைகளை ஆற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராவார். அவரது பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துவது நாட்டின் பாதுகாப்புத் தரப்புகளினது பொறுப்பாகும். பொலிஸ் தரப்பால் ஆற்ற வேண்டிய தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றப்படவில்லை.

பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கும் அறிக்கைகளை திரிபுபடுத்த வேண்டாம் என்றும், முறைப்பாட்டாளர்களை குற்றவாளிகளாக மாற்ற வேண்டாம் என்றும் பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment