போதைப் பொருள், பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தில் செயற்படுகிறார்கள் - ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 29, 2025

போதைப் பொருள், பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தில் செயற்படுகிறார்கள் - ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்தி போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். பலவீனமான எதிர்க்கட்சியே இன்று உள்ளது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பிரித்தானியாவுக்கு சென்றுள்ள அமைச்சர்களான நளிந்த ஜயதிஸ்ஸ, சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் ஹர்ஷண நாணயக்கார ஆகியோர் லண்டன் நகரில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். நிறைவடைந்த ஒரு வருட காலத்தில் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக செயற்படுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் அப்போதுதான் சட்டத்தை மதிக்கும் சிறந்த சமூகம் ஒன்று தோற்றம் பெறும். இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்க்கட்சியினர் அதற்கு தடையாக செயற்படுகிறார்கள். பாதுகாப்பு சார்ந்த விடயங்களை பலவீனப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். பலவீனமான எதிர்க்கட்சியே இன்று உள்ளது.

பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment