இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மனுஷ நாணயக்கார நாளை (15) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும், அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முன்பிணை மனுவில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான விவசாயத் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2023 நவம்பர் 05ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த விசாரணையின் விளைவாக தான் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன் முன்பிணையில் விடுவிக்கக் கோரி இந்த மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment