அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள் என்கிறார் மனோ - News View

About Us

About Us

Breaking

Monday, October 13, 2025

அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள் என்கிறார் மனோ

வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்தவில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்தவில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்புத் திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்கு காணியும், வீடும், தருகிறோம் என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (13) நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பில் மனோ கணேசன் எம்பி, மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணி” என்ற மணமகள், “வீடு” என்ற மணமகன் இல்லாத, காணி, வீட்டு உரிமை கல்யாணம் நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி உள்ளார்கள். உண்மையில், நடந்தது, “காது குத்தல்” கல்யாணம் என நான் நினைக்கிறேன். நன்றாக ஜனாதிபதி அனுரவுக்கு இந்த விடயம் முழுமையாக தெரியும் என நான் நம்பவில்லை. அவரது பெயரை வைத்து வாழும், மலையக ஜேவிபி அமைச்சர்கள், அனுரவை ஏமாற்றுகிறார்கள் எனவும் நான் நினைக்கிறேன்.

இந்த 10,000 தனி வீட்டுத்திட்டம் என்பது, தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து, நோர்வுட் நகரில் அவருக்காக நாம் நடத்திய வரவேற்பு நிகழ்வில், அவர்களிடம் கேட்டுப்பெற்று, அவரது வாயால் இந்திய அரசின் சார்பில் அவர் வழங்கிய உறுதிமொழியின் மூலம், இலங்கை வாழ் மலையக மக்களுக்காக நாம் பெற்றுக்கொடுத்தது ஆகும். இதையே இன்றைய அரசு முன்னெடுக்க முனைவதாக தெரிகிறது. நல்லது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம்.

ஆனால், அரசாங்கத்தில் இருக்கும் ஜேவிபி மலைநாட்டு அமைச்சர்கள், எம்பிக்கள், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தாம் அனுபவமற்றவர்கள் என்பதை முழு உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். அது மட்டுமல்ல, நாம் ஆரம்பித்த திட்டத்தையே அரைகுறையாக செய்துகொண்டு, எம்மையே மிகவும் தரக்குறைவாக குறை கூறிக்கொண்டு திரிகிறார்கள்.

இன்று, மலைநாட்டில் தனி வீடு கட்ட காணி அடையாளம் காணப்படவில்லை. அந்த காணியில் அடிக்கல் நாட்டு விழா, நடத்தப்படவில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்தப்படவில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. ஆனால், விழா நடத்தி, அப்பாவி மக்களையும் ஏமாற்றி உள்ளார்கள். தங்கள் தலைவர், நாட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை மலைநாட்டுக்கு அழைத்துவந்து, அவரையும் ஏமாற்றி உள்ளார்கள்.

இது போதாது என்று, இந்த வீட்டுத்திட்ட செலவில் 90% நிதியை எமக்காக நன்கொடையாக தரும் இந்திய அரசின் தூதரையும் அழைத்து வந்து, அவரது பெயரையும் பயன்படுத்தி, அரசியல் செய்கிறார்கள். தங்கள் இயலாமையை, இந்திய அரசின் மூவர்ண தேசிய கொடியால் மறைக்க முயல்கிறார்கள். வரலாற்றில் இதற்கு முன்பு நாம், இந்திய தூதரை அழைத்து வந்து, ஒன்றில், புது வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி விழா எடுப்போம். அல்லது புது வீடுகளை கட்டி முடித்து, கையளிக்கும் விழா நடத்துவோம்.

ஆனால், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், இந்திய தூதரையும் அழைத்துவந்து, பயனாளிகள் என்று அப்பாவி மக்கள் சிலரையும் அழைத்துவந்து, வெறும் காகிதத்தில், “உங்களுக்கு காணியும், வீடும் தருகிறோம்” என எழுதி கொடுத்து அனுப்பி உள்ளார்கள்.

இவற்றின் மூலம், “பொய் சொல்லவும், தவறு செய்யவும், பயமும், வெட்கமும் இல்லாத மனிதர்கள்” என தம்மை இந்த ஜேவிபி மலைநாட்டு அமைச்சர்கள், நிரூபித்து உள்ளார்கள்.

No comments:

Post a Comment