(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அடிப்படை சட்டத்தை அறியாமல் இருப்பது பல பிரச்சினைகளுக்கும், மோதல்களுக்கும் பிரதான காரணியாக உள்ளது. இலங்கையின் எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்திற்கொண்டு பாடத்திட்டத்தில் குடியுரிமை என்ற பாடத்தை சட்டம் மற்றும் குடியுரிமை கல்வி என்று பெயர் மாற்றி சட்டத்தை அடிப்படை பாடமாக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற பாடசாலைக் கலைத்திட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுக்கவியல் விடயங்களை உள்ளடக்குதல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலவச கல்வி கட்டமைப்பில் 6-11 வரையான தரங்களின் பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடப்பரப்பாக உள்ளடக்க வேண்டும். இதன் முக்கியத்தை நாட்டு மக்கள் அனைவரும் இன்று விளங்கிக் கொண்டுள்ளதால் இந்த தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன்.
இலங்கையின் நீதிமன்றங்களில் சட்டத்தை அறியாமல் இருப்பது விடுவிப்புக்கான காரணியாக கருதப்படாது என்ற கொள்கை காணப்படுகிறது. சகல பிரஜைகளும் அடிப்படை சட்டம் குறித்து அடிப்படையான புரிதலை பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது. இருப்பினும் துரதிஸ்டவசமாக இதுவரையான காலப்பகுதியில் பாடசாலை கல்வி கட்டமைப்பில் அடிப்படை சட்டம் ஒரு முறையான பாடத்திட்டமாக உள்ளடக்கப்படவில்லை.
குடியுரிமை கல்வி பாடத்தில் சட்டத்தின் ஒரு சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவை போதுமானதாக அல்லது முழுமையானதாக அமையவில்லை. அத்துடன் உயர்தரம் கலை பிரிவில் அளவையியல் மற்றும் தர்க்கவியல் பாடத்தில் சட்டத்தின் ஒரு சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோல் புவியியல் பாடத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களும், வணிக பாடத்தில் வர்த்தகம் மற்றும் வியாபாரம் தொடர்பான சட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இவை முறையாக கற்பிக்கப்படுவதில்லை என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பின்லாந்து நாட்டில் குடியுரிமை மற்றும் அடிப்படை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் குடியுரிமை மற்றும் அரச நிர்வாகம் என்ற பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாடான இந்தியாவில் அரசியல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகவே இலங்கையின் எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்திற்கொண்டு பாடத்திட்டத்தில் குடியுரிமை என்ற பாடத்தை சட்டம் மற்றும் குடியுரிமை கல்வி என்று பெயர் மாற்றி சட்டத்தை அடிப்படையாக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment