பொலித்தீன் பைகள் வழங்கத் தடை : கட்டணம் அறவிட வர்த்தமானி அறிவிப்பு - உயர் நீதிமன்றத்தில் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 2, 2025

பொலித்தீன் பைகள் வழங்கத் தடை : கட்டணம் அறவிட வர்த்தமானி அறிவிப்பு - உயர் நீதிமன்றத்தில் இணக்கம்

லோரன்ஸ் செல்வநாயகம்

ஷொப்பிங் பேக் உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதை தடுக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் அறவிடப்படுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் உட்பட பிரதிவாதிகள் நேற்றையதினம் (01) உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பில் தெரிவித்துள்ளதுடன் அதற்கு பதிலளித்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கட்டணம் அறவிடும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்படும் என அறிவித்தார்.

பொலித்தின் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வேலைத்திட்டமொன்றை வகுக்கக்கோரி, சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டண அறவீடு தொடர்பில் மார்ச் மாதத்திலேயே உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சார்பில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் கட்டணம் அறவிடும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment