(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
எம்மை கொலை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. நாம் இறந்தால் பேயாக வந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை பழிவாங்குவோம் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பாதுகாப்பு திட்டமிட்ட வகையில் நீக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரே, முடிந்தால் எம்மை கொலை செய்யுங்கள். நாங்கள் இறந்தாலும் பேயாக வந்து உங்களை பழிவாங்குவோம். எம்மை கொலை செய்யவே முயற்சிக்கின்றீர்கள்.
எமக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் அச்சமடையப் போவதில்லை. இறந்தாலும் பேயாக வந்து பழிவாங்குவோம்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரை பாதாள குழுவின் உறுப்பினர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். இவரது பெயரும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி எமக்கு பலவற்றை சொல்ல முடியும்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்களை கைது செய்வதற்கு முன்னவே அவர் பாதாள குழுவின் உறுப்பினர், குற்றவாளி என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு.
துப்பாக்கிதாரிகளை கைது செய்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று வாக்குமூலம் பெறுங்கள். அப்போது நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம்.
மக்கள் பிரதிநிதியான ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவரை கேவலப்படுத்த வேண்டாம். அந்த நபரையும், அவரது குடும்பத்தாரையும் கேவலப்படுத்தும் வகையில்தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை சபையில் பேசினார் என்றார்.

No comments:
Post a Comment