(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்குக்கான புகையிரதங்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடனான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின்போது வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது, 2014 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் புகையிரத திணைக்களத்தின் மொத்த வருமானத்தில் 8 வீதமானவை வடக்கு, கிழக்கு புகையிரத நிலையங்களின் ஊடாக கிடைத்துள்ளன.
இதேவேளை வடக்கு மாகாண புகையிரத நிலையங்களில் சிங்கள மொழியில் 14 பேரும், தமிழ் மொழியில் 68 பேரும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர மற்றைய அதிகாரிகளில் சிங்கள மொழியில் 52 பேரும், தமிழ் மொழியில் 64 பேரும் இருக்கின்றனர்.
அத்துடன் வடக்கில் 23 பிரதான புகையிரத நிலையங்கள் அடங்கலாக மொத்தமாக 41 புகையிரத நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையில் 16 பிரதான புகையிரத நிலையங்களும் 13 உப புகையிரத நிலையங்களும் உள்ளன.
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையில் 7 பிரதான புகையிரத நிலையங்களும் 4 உப புகையிரத நிலையங்களும் உள்ளன. கிழக்கில் 18 பிரதான புகையிரத நிலையங்கள் அடங்கலாக 14 புகையிரத நிலையங்களும் இருக்கின்றன.
இதேவேளை உறங்கும் பெட்டிகள் அடங்கிய புகையிரதம் எதுவும் இதுவரையில் சேவையில் ஈடுபடவில்லை. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய புகையிரத பெட்டிகளே இணைக்கப்பட்டுள்ளதால் பழைய உறங்கும் பெட்டி சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட பெட்டியுடனான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பழைய முதலாம் வகுப்பு உறங்கும் பெட்டியில் 12 பயணிகளுக்கே பயணிக்க முடியுமென்றாலும் புதிய குளிரூட்டப்பட்ட புகையிரத பெட்டியில் 48 பயணிகள் பயணிக்க முடியும். இதனால் புதிதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகளில் உறங்கும் பெட்டிகள் அடங்கவில்லை என்றார்.
இதன்போது மேலதிக கேள்விகளை எழுப்பிய சிறீதரன், இனிவரும் நாட்களிலாவது புகையிரதங்களில் முதலாம் வகுப்பு உறங்கும் பெட்டிகள் இணைக்கப்படுமா? அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, உறங்கும் பெட்டிகளை இணைத்தால் அதில் குறைந்தளவான பயணிகளே பயணிக்க முடியும். அதில் 12 பயணிகளுக்கே பயணிக்க முடியுமாக இருக்கும். ஆனால் குளிரூட்டப்பட்ட சொகுசு பெட்டிகளில் 48 பேர் வரையிலான பயணிகள் பயணிக்க முடியும். இதனால் உறங்கும் பெட்டிகளை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக மாற்றியமைக்கக்கூடிய வசதியான ஆசனங்களை கொண்ட புகையிரத பெட்டிகளையே பயன்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:
Post a Comment