குண்டு துளைக்காத வாகனத்தை ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, October 4, 2025

குண்டு துளைக்காத வாகனத்தை ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்தை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்ட விசேட அறிக்கையில், குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டம் நடைமுறைக்கு வந்த பின், செப்டெம்பர் 24 அன்று ஜனாதிபதி செயலாளர், மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களையும் திருப்பி கையளிக்குமாறு அறிவித்ததாக மனோஜ் கமகே கூறினார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலை காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மனோஜ் கமகே எச்சரித்துள்ளார்.

“அடுத்த வாரம், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்து, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு தேவையான வாகனங்களை பெறுவதற்கான கோரிக்கையை முன்வைப்போம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு வாகனமானது துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார்.

தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்ததையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பல அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்டன் இல்லத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment