(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
தற்போது 1 - 1.30 மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இருக்கின்றனர். அவ்வாறெனில் அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையாவது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இன்றி பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது.
எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். பொருத்தமான மாற்றங்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய முறையில் இடைவேளை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இரு இடைவேளைகள் வழங்கப்பட்டால் மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியனுப்புவதற்கும், மீள அழைப்பதற்கும் கூட நேரம் போதாது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒரு நடைமுறை சாத்தியமற்ற முறைமையை யோசனையை வழங்கியது யார்?
தேசிய கல்வி நிறுவனத்தின் எவ்வித தகுதியும் அற்ற குழுக்களாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறை பட்டதாரிகள் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பாடப் பரப்புக்களை தயாரிக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் குழுக்களில் அங்கத்துவம் வகித்தவர்களாவர். அதனால் அவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நவம்பர் 7ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்க முன்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.

No comments:
Post a Comment