லோரன்ஸ் செல்வநாயகம்
பாடசாலைகளில் 6ஆம் தரம் முதல் 8ஆம் தரம் வரை குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி மறுசீரமைப்பின்போது சாதாரண தரத்திலும் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலைகளில் 6ஆம் தரம் முதல் சட்டக் கல்வியை உள்ளடக்க வேண்டும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகமவினால் நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் பிரதமர் மேலும தெரிவிக்கையில், குடியுரிமை கல்வி பாடத்தில் சட்டம் தொடர்பான பகுதியை இணைத்துள்ளோம். ஒழுக்கமான சமூகத்திற்காக சட்டம் தொடர்பில் அறிந்துகொள்ளல், சட்டம், சமுக நலனுக்காக செயற்படும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்தல், தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் சட்ட ஆவணங்களை முறையாக பொறுப்புணர்வுடன் பயன்படுத்துதல், சட்டத்தை மதிக்கும் சிறந்த பிரஜைகளை உருவாக்கும் குணாம்சங்களை உருவாக்குதல், சிறந்த பிரஜைகளுக்கான குணாம்சங்களுடன் நாட்டின் அபிவிருத்தியில் பங்களித்தல் ஆகியன 6ஆம் தரத்துக்கான மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி தரம் 6 முதல் 8ஆம் தரம் வரையில் ஒரே மாதிரியில் சட்டக் கல்விக்கான பகுதியை ஒதுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் பெயரை மாற்றுவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் கலந்துரையாடப்படும். அத்துடன் சாதாரண தரத்தில் தெரிவு பாடமாக உள்ளடக்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பு ஊடாக புதிய பாடங்கள் பல எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும். அதன்போது சட்டக் கல்வியையும் இணைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment