நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி இந்திய கடவுச்சீட்டுடன் காணப்பட்டமை விசாரணைகளை வேறுமுனைக்கு திருப்பியுள்ளது.
தமிழினி என்ற போலிப் பெயரிலான இந்திய கடவுச்சீட்டை இஷாராவுக்கு வழங்கியவர் யாரென்ற கோணத்தில், விசாரணைகள் திரும்பவுள்ளன.
குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதற்கு கடல் வழியாக உதவுபவரென நம்பப்படும் கெனடியன் பெஸ்தியம்பிள்ளை (ஜே.கே.பாய்) என்பருடன் இஷாராவுக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்றும் புலனாய்வுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இவரே, போலி பெயரிலான இந்திய கடவுச்சீட்டை இஷாராவுக்கு வழங்கியதாக புலனாய்வுத்துறை சந்தேகிக்கிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இம்மாதம்10 ஆம் திகதி இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற பாதுகாப்பு அதிகாரியும் நேபாளத்திற்குச் சென்றிருந்தனர்.
அங்கு சென்ற இவர்களை நேபாளத்திற்கான பிரதித் தூதுவர் சமீரா முனசிங்கவும், அவரது கணவரும் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து, அந்நாட்டு காவல்துறையினரையும் தொடர்புபடுத்தினர்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,நோபாள காவல்துறையினர் வேறொரு தரப்பினர் மூலம் ஜே.கே. பாயைக் கைது செய்தனர்.
இவரிடம் இஷாராவைப் பற்றி ரொஹான் ஒலுகல விசாரித்தபோது, தமக்கு எதுவும் தெரியாதென பதிலளித்துள்ளார்.
எனினும், கே.ஜே.பாயின் தொலைபேசியிலிருந்து இஷாராவின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த பொலிஸ் அதிகாரிகள், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இஷாராவின் இருப்பிடம் கண்டுடறியப்பட்டது.
பின்னர், நேபாள காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை விசாரித்தபோது, இந்தியாவின் பெங்களூரிலிருந்து வந்த தமிழினி என்ற பெண், இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்காக தமிழினி என்ற பெண் மாதத்திற்கு 6,000 நேபாள ரூபாய் செலுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளில் தமிழினி என்ற பெயரில் தங்கியிருப்பது இஷாரா செவ்வந்தி என்பது தெரியவந்துள்ளது. அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, நேபாள காவல்துறையினரும் குறித்த இடத்திற்குச் சென்றனர்.
நேபாள காவல்துறையினர் இஷாராவை கைது செய்தபோது, அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது, பின்னர் ரொஹான் ஒலுகல சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
No comments:
Post a Comment