பிரச்சினைகளை இலகுபடுத்துவதற்காக கொலைகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவை என அரசாங்கத்தால் கூறப்படுகின்றன : எதிர்காலத்தில் பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார் சுஜீவ சேனசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, October 23, 2025

பிரச்சினைகளை இலகுபடுத்துவதற்காக கொலைகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவை என அரசாங்கத்தால் கூறப்படுகின்றன : எதிர்காலத்தில் பாராளுமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார் சுஜீவ சேனசிங்க

(எம்.மனோசித்ரா)

நீதிமன்றத்துக்குள் இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள், எதிர்காலத்தில் பாராளுமன்றத்துக்குள் கூட இடம்பெற வாய்ப்புள்ளது. வெலிகம பிரதேச சபைத் தலைவரது கொலை தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையிலேயே கருத்துக்களை தெரிவித்து வருகிறது. பிரச்சினைகளை இலகுபடுத்துவதற்காக இவ்வாறான கொலைகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவை எனக் கூறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஓராண்டு காலத்துக்குள் குற்றச் செயல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துமளவுக்கு அவை சாதாரணமாகியுள்ளன. கடந்த காலங்களை விட பாதாள உலகக் குழுக்களால் மிகவும் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றத்துக்குள் இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள், எதிர்காலத்தில் பாராளுமன்றத்துக்குள் கூட இடம்பெற வாய்ப்புள்ளது. வெலிகம பிரதேச சபைத் தலைவரது கொலை தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையிலேயே கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றபோது, குற்றவாளிகளானாலும் அவர்களைக் கொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியிலிருந்தபோது தெரிவித்திருந்தார். ஐ.நா.வில் கூட ஜனாதிபதி இது தொடர்பிலேயே உரையாற்றியிருந்தார்.

ஆனால் தற்போது வெலிகம பிரதேச சபைக் கட்டடத்துக்குள் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமைக்கு அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவாறு எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.

பிரச்சினைகளை இலகுபடுத்துவதற்காக இவ்வாறான கொலைகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவை எனக் கூறிவிடுகின்றனர்.

மாகந்துரே மதுஷ கொல்லப்பட்டபோது, அவர் பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையவர் என்பது இரண்டாம் பட்சமாகும் என்றும், அவர் உயிர் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டதாகவும் அன்று அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டார். பாதாள உலகக் குழுக்கள், போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு கூட அச்சமான சூழலே காணப்படுகிறது.

பாராளுமன்றத்தில் இவை தொடர்பில் உரையாற்றினாலும் வெளியில் நடமாடுவதற்கு அச்சமாகவுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் பேசும் அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது. தனக்கான பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை அவரால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

பாதாள உலகக் குழுவினருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமே தவிர, அவர்களிடம் சட்டம் கையளிக்கப்படக் கூடாது. கொலம்பியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. அவ்வாறான நிலைமை இலங்கையில் ஏற்படுவதற்கு இடமளித்து விடக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment