எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம், பாராளுமன்றமே பொறுப்புக்கூற வேண்டும் - தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 23, 2025

எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம், பாராளுமன்றமே பொறுப்புக்கூற வேண்டும் - தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கான பொறுப்பை பாராளுமன்றமே ஏற்க வேண்டும். பொறுத்தமான முறைமையை பாராளுமன்றம் தேர்வு செய்தால், எந்த சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை தம்மால் நடத்த முடியும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

குருணாகல் பிரதேசத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கு எம்மால் எந்த வகையிலும் பொறுப்புக்கூற முடியாது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது நாட்டில் சட்டமொன்று இல்லை. இந்த பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையிலிருந்து தற்போது கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமைக்கு மாறியிருக்கின்றோம். விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையில் காணப்பட்ட குறைபாடுகளாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டது. அதற்கமைய புதிய முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந்த முறைமையே அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே தற்போது இறுதித் தீர்மானத்தை எடுக்கக்கூடிய பொறுப்பு பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. இந்த இரு முறைமைகளில் பொறுத்தமானதை பாராளுமன்றமே தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்தல் முறைமை தேர்வு செய்யப்படும் பட்சத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் எம்மால் தேர்தலை நடத்த முடியும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

அதேவேளை இத்தனை ஆண்டுகள் மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டமைக்கு சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். எனவே அனைவரும் இந்த பொறுப்பினை ஏற்று ஒற்றுமையுடன் அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை விடுத்து ஒரு புறமாகவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் பக்கம் இந்த பந்தினை தள்ளிவிடுவது பொருத்தமற்றது என்றார்.

No comments:

Post a Comment