(எம்.மனோசித்ரா)
துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் ஏந்தி சிறைகளில் இருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 67 சதவீத மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். தேசிய பாதுகாப்பு பாரதூரமான பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. அவர் வெலிகம பிரதேச சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டபோதும், அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இனியாவது ஏனைய அரசியல்வாதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு நாம் பிரயோகிப்போம்.
101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 50 க்கும் மேற்பட்டோர் இவ்வாண்டுக்குள் கொல்லப்பட்டுள்ளனர். வருடம் நிறைவடைவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்று கூற முடியாது.
நாளாந்தம் துப்பாக்கிச் சூடு என்ற நிலைமை மாறி, இன்று ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் துப்பாக்கிச்சூடு என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
1987 மற்றும் 1988 களில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சி செய்கின்றனர். அதுவே இந்த அரசாங்கத்தின் வரலாறாகும்.
துப்பாக்கிகளையும், ஆயுதங்களையும் ஏந்தி சிறைகளில் இருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் பாராளுமன்றத்தில் அது குறித்த யோசனையொன்றை முன்வைத்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அரசாங்கம் இதுவரையில் அதற்குரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அந்த யோசனையை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். தேர்தல் எந்த முறைமையில் நடத்தப்பட வேண்டும் என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment