லோரன்ஸ் செல்வநாயகம்
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் பல பெயர்களை குறிப்பிட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போதைப் பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சமூக விரோத குற்றவாளிகளுக்கு புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற போதைப் பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கும்போது எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளுகின்றார்கள்.
பேயாக வந்து பழிவாங்குவார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்கள். தயவுசெய்து பேயாக வரவேண்டாம். ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே அந்த முகத்தை பார்க்க முடியவில்லை. பேயாக வந்தால் எப்படியிருக்கும்? அச்சமடையவும் வேண்டாம். பேயாக வரவும் வேண்டாம்.
நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை.
சிலர் தமது சுய தேவைகளுக்காக பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களை பலப்படுத்தி அதனூடாக இலாபமடைந்தார்கள் என்பது உண்மை.
போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்கள் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டுள்ளது. எமது அரசாங்கத்தில் எவரும் பாதாளக் குழுவினருடனோ அல்லது போதைப் பொருள் வர்த்தகர்களுடனோ தொடர்பு கொண்டிருக்கவில்லை. இதனால்தான் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிராக தேசிய மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் மாகந்துரே மதுஸ் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார். சாமர சம்பத் அப்போது எங்கிருந்தார். மரண தண்டனைக் கைதிகள் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இருந்தார்கள். அந்த நிலையை நாம் மாற்றியமைத்துள்ளோம்.
பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்படும்போது அவர்களிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஏதாவதொரு வழியில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறான நிலை தற்போது கிடையாது. முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால்தான் எதிர்க்கட்சியினர் இன்று கலக்கமடைந்துள்ளார்கள்.
போதைப் பொருளுக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு அச்சமடைந்த நிலையில்தான் எதிர்கட்சியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அதனை நாம் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment