(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
ஆயுதமேந்திய குழுவுக்கு தலைவராக செயற்பட்டதால்தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால புலனாய்வு அறிக்கைக்கமைய, 1988 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். அவர்தான் இன்று பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார். கடந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது. அனைத்து செயற்பாடுகளுக்கும் துணைசென்றுவிட்டு இன்று தூய்மையானவர்களைப் போன்று பேசாதீர்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற போதைப் பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெலிகம பிரதேச சபையின் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அரசாங்கம் பாதாள குழுக்களின் கணக்கில் சேர்த்துள்ளது. இந்த கொலை பற்றி நேற்று (நேற்று முன்தினம்) சபையில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 'வெலிகம லசா' என்று விழித்திருந்தார். இவர்கள் ஏனையோரின் கடந்த காலங்கள் பற்றி பேசுவதாயின் இவர்களின் கடந்த காலங்களை பற்றியும் நாம் பேச வேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால 1988 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார். பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் பொலிஸ் மற்றும் புலனாய்வு அறிக்கைக்கு அமைவாக இவர் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். ஆயுதமேந்திய குழுவுக்கு தலைமைத்துவமாக செயற்பட்டதால் இவர் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதியாக செயற்பட்டதால்தான் ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். இவரது கடந்த காலத்தை நாங்கள் நன்கு அறிவோம். எதிர்காலத்தில் இவரை ஆனந்த விஜேபால என்று அழைக்கும்போது புனைபெயர் வைத்து அழைப்பார்கள். புலனாய்வு அறிக்கைக்கு அமைய பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்ட நபர் இன்று பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால பற்றி கல்கமுவ, அம்பேன்பொல, குருநாகல் மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள். அம்பேன்பொல, குருநாகல் மற்றும் தம்புத்தேகம பொலிஸ் நிலையங்களுக்கு மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு இவர் இன்றுவரை பதிலளிக்கவில்லை. திவுலம்பிட்டிய அமரே பற்றி பேசுகிறார்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினோம். அவரது ஆட்சியில்தான் அந்நிலைமை காணப்பட்டது என்பதை மறக்க வேண்டாம். கடந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது. அனைத்து செயற்பாடுகளுக்கும் துணை சென்றுவிட்டு இன்று தூய்மையானவர்களைப் போன்று பேசாதீர்கள் என்றார்.
.webp)
No comments:
Post a Comment