நாட்டில் நிலவும் கடும் மழை, காற்றுடனான சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை மறுதினம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் கடும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள வளிமண்டலத்தில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாகுவதே இந்த நிலைமைக்கு காரணம் என்று அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும், மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து நீர்த் தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம். ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுடன் அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment