(செ.சுபதர்ஷனி)
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 57 இலட்சத்துக்கும் அதிகமானோர் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6,082 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் தலையீட்டுடன் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் விசேட விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி நடவடிக்கைக்கமைய இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டு மொத்தமாக 57 இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6,082 சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் விசாரணைகளின்போது சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 35,035 சந்தேகநபர்களும் இதன்போது கைதாகியுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்திய 47,600 சாரதிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கைகளின்போது ரி-56 ரக துப்பாக்கிகள் 66, கைதுப்பாக்கிகள் 69, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 50 உள்ளடங்களாக 1,996 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நாட்டில் உள்ள குற்ற வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களாவர். ஆகையால் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு முன்னுரிமையளித்து சம்பந்தப்பட்ட சந்தேகபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் 1,267 கிலோ கிராம் ஹெரோயினுடன் 56,082 சந்தேகபர்களும், 1868 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 64,690 சந்தேகநபர்களும், 14,281 கிலோ கிராம் கஞ்சா அல்லது கேரள கஞ்சாவுடன் 57,005 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர். மேலும் 552 கிலோ கிராம் ஹசிஸ், 32 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 35 இலட்சம் போதை மாத்திரைகள் என்பனவும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய நாவுல மொரகாகந்த நீர்த் தேக்கத்திலிருந்து 2128 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment