வழக்கில் ஆஜராவதற்காக ஒரு சட்டத்தரணிக்கு ஒரு அமர்வுக்கு ஒரு நாளைக்கு 6 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது : நிதிப் பணிப்பாளரை அனைத்து நிலுவைச் சம்பளங்கள், கொடுப்பனவுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்த உத்தரவு : தனிப்பட்ட தேவைகளின் நிமித்தம் அதிகாரிகளை அசௌகரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்ட விடயங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 16, 2025

வழக்கில் ஆஜராவதற்காக ஒரு சட்டத்தரணிக்கு ஒரு அமர்வுக்கு ஒரு நாளைக்கு 6 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது : நிதிப் பணிப்பாளரை அனைத்து நிலுவைச் சம்பளங்கள், கொடுப்பனவுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்த உத்தரவு : தனிப்பட்ட தேவைகளின் நிமித்தம் அதிகாரிகளை அசௌகரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்ட விடயங்கள்

2021 ஆம் ஆண்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட நிதிப் பணிப்பாளர் ஒருவர் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரசபையினால் 15.01 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டது.

இங்கு ஆஜரான அதிகாரிகளிடம் வினவியபோது, இந்த வழக்குகள் சம்பந்தமாக ஒரு சட்டத்தரணிக்கு ஒரு அமர்வுக்கு ஆஜராவதற்கு 6 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. 

ஆனால், இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட நிதிப் பணிப்பாளரை அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. 

எனினும், அதிகார சபை மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் இங்கு தெரியவந்தது. 

இது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இந்தக் காலப்பகுதியில் தனிப்பட்ட தேவைகளுக்காக அதிகாரிகளை அசௌகரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்று குழு சுட்டிக்காட்டியது. 

இதனால் பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது.

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனைப் பரிசீலனை செய்வதற்கு பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் கூடியபோது இது தெரியவந்தது.

அத்துடன், அதிகார சபையின் பிரதான கட்டடத்தின் கூரையை திருத்துவதற்காக 5.59 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொறியியல் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட ஒரு பொறியியலாளரால் அது அங்கீகரிக்கப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது. 

இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது அதிகார சபையிடம் போதுமான நிதி இருக்கவில்லை என்றும், இதனால் ஒப்பந்ததாரர் ஒருவரைக் தேடுவது கடினமாக இருந்தது என்றும் இங்கு ஆஜரான அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதனால் இந்தத் தொகைக்கு ஒரு ஒப்பந்ததாரரை மிக சிரமத்துடன் இணைத்துக் கொள்ள முடிந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

எனினும், குறைந்த தொகைக்கு ஒப்பந்ததாரரைத் தேடுவதற்கு நேர்ந்தாலும், அது அத்தியாவசியமான விடயம் என்று குழு சுட்டிக்காட்டியது. எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தியது.

புதிய பணியாளர்கள் கட்டமைப்பை அங்கீகரிப்பது தொடர்பாகவும், தற்போதுள்ள அத்தியாவசிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இதுவரை இருந்த தலைவர்கள் தனிப்பட்ட அபிலாஷைகளுடன் செயற்பட்டுள்ளனர் என்பதும், இதனால் நிறுவனம் செல்ல வேண்டிய சரியான திசையில் செல்லவில்லை என்பதும் தெளிவாகிறது என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

எனவே, எதிர்காலத்தில் அந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து நிறுவனத்தின் அபிவிருத்திக்காக செயற்படுமாறு குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார். மேலும், நிறுவனத்தில் உள்ள நபர்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அவர் பரிந்துரைத்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சுஜீவ சேனசிங்க, சமன்மலீ குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சுதத் பலகல்ல, சந்திம ஹெட்டியாராச்சி, திலின சமரகோன், தர்மப்பிரிய விஜேசிங்ஹ, தினேஷ் ஹேமந்த மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment