பாராளுமன்றத்தில் விவாதத்தைப் பெறுவதற்கும், பெண் உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிவதற்குத் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 16, 2025

பாராளுமன்றத்தில் விவாதத்தைப் பெறுவதற்கும், பெண் உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிவதற்குத் தீர்மானம்

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அதாவது 'இளஞ்சிவப்பு மாதம்' எனக் கருதப்படுவதுடன், அதற்கமைவாக நாட்டில் மார்பகப் புற்றுநோயைத் தடுத்தல் மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தை அறிவுறுத்தும் விசேட கூட்டம் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா போல்ராஜ் வெளிநாடு சென்றிருந்ததன் காரணமாக, தற்காலிகமாகத் தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பெண் வைத்தியர்களால் மார்பகப் புற்றுநோய் தடுப்பு குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்துக்கு விளக்கமளிக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் என்றும், அதற்கமைய, இலங்கையிலும் தினமும் சுமார் 15 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், சுமார் 3 பேர் இறப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும் என்றும், அதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுடன் சுய மார்பகப் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து இந்நாட்டின் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இளஞ்சிவப்பு புதன்கிழமை (Pink Wednesday) என்ற பெயரில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் நாட்டில் முதன்முறையாக கொழும்பு மியூசியஸ் கல்லூரி மூலம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. 

அதற்கமைய, இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் முதலாவது புதன்கிழமை அந்தப் பாடசாலை மாணவிகள் இளஞ்சிவப்பு நிற கழுத்துப்பட்டி அணிந்து வருகை தருகின்றனர். 

இந்த விழிப்புணர்வு மற்றும் வேலைத்திட்டங்களை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பெண் உறுப்பினர்கள் இங்கு வலியுறுத்தினர்.

அத்துடன், அடுத்த பாராளுமன்ற வாரத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாளில், இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து வருவது என்றும், இது தொடர்பாக சபையில் ஒரு விவாதத்தைப் பெறுவதற்காக கோரிக்கை விடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பி, அனைத்துப் பாடசாலைகளிலும் காலைக் கூட்டத்தின் போது பாடசாலை மாணவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பாராளுமன்ற பணியாளர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை நடத்துவதற்கும் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் உறுப்பினர்களான பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சதுரி கங்காணி மற்றும் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ ஆகியோரும், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment