யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, யாழ்ப்பாண பொது நூலகத்திற்காக jaffna.dlp.gov.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒன்லைன் ஊடாக வாசிக்க வாய்ப்பளிக்கும்.
யாழ்ப்பாண மக்களின் பெருமையின் அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாண பொது நூலகம், ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகங்களின் தொகுப்பைக் கொண்ட நூலகமாகும். பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான மக்களால் தினமும் பயன்படுத்தப்படுகிறது.
யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு ஒருங்கிணைந்த நூலக முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் அட்டை பிரவேச வசதி மற்றும் விசேட தேவை உள்ளவர்களுக்கு உதவி தொழில்நுட்பத்துடன் கூடிய விசேட அலகும் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் திட்டத்திற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
மின் நூலகத் திட்டத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்த ஜனாதிபதி, அதன் வாசிப்பு அறை மற்றும் புத்தகம் வழங்கும் பிரிவுக்கும் விஜயம் செய்த அதே வேளையில், பணியாளர்களுடன் சுமூகமாக உரையாடலில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் , யாழ்ப்பாண நூலகர் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment