(இராஜதுரை ஹஷான்)
சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத் திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம். தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கைதுகள் தொடர்பில் தற்போது மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள்.
225 உறுப்பினர்கள் ஒட்டு மொத்த மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆகவே மக்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் பற்றி போதுமான தெளிவை பெற்றிருக்க வேண்டும்.
நாட்டின் சட்டத்தை பற்றி மக்கள் பூரண தெளிவில்லாமல் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தால் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
ஆகவே அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் தொடர்பில் முதலில் மக்கள் தெளிவு பெற வேண்டும்.
எமது கால சூழல் தற்போது கிடையாது. தற்போதைய இளம் தலைமுறையினர் மாறுபட்ட வகையில் உள்ளார்கள். அவர்களுக்கு சட்டம் மற்றும் அடிப்படை விடயங்கள் குறித்து போதுமான புரிதல் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் பத்திரிகை கூட வாசிப்பது கிடையாது.
சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடிப்படை சட்டத்தை பாடத் திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம். தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
முதலில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எவ்வாறு சட்டத்தின் ஊடாக காப்பீடு பெற்றுக் கொள்வது, எங்கு சென்று முறையிடுவது என்பது கூட பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆகவே அடிப்படை சட்டத்தை கல்வி கட்டமைப்புக்குள் உள்ளடக்க வேண்டும் என்றார்.
.jpg)
No comments:
Post a Comment