அரசியலமைப்பு திருத்தத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் : வாக்களிப்பின்போது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

அரசியலமைப்பு திருத்தத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் : வாக்களிப்பின்போது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். அரசியலமைப்பு திருத்தத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் மஹிந்த ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டதல்ல. அது ஓய்வு பெற்ற அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவானதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பு திருத்தத்தின்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனினும் அரசியலமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகளை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு சற்று காலம் எடுத்துக் கொள்வதில் பிரச்சினையில்லை என்று நினைக்கின்றோம்.

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலம் மாத்திரமே கடந்துள்ளது. அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்களே ஆகின்றன. எனினும் நாட்டின் அபிவிருத்திக்கான பல்வேறு அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது இலக்காகும்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இவற்றுக்கிடையில் ஊழல், மோசடிகளுக்கெதிரான சுற்றிவளைப்புக்களிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்று வருகின்றோம். இவற்றுக்கு மத்தியில் அரசியலமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிப்போம்.

அதன் அடிப்படையிலேயே தற்போது முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளால் திறைசேரிக்கு ஏற்படும் சுமை, அதனால் அதிகரிக்கும் மறைமுக வரி என்பவற்றால்தான் மக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

எனவேதான் அதனை நீக்குவதற்கான சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இதற்கெதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற போதிலும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று நம்புகின்றோம்.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளுக்காக திறைசேரி பெரும் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எண்ண வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கின்றோம். வாக்களிப்பின்போது இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமூலமல்ல. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் சகல முன்னாள் ஜனாதிபதிகளும் அதற்கமைய செயற்படுவர் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment