(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பங்குபற்றியதைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டங்களுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். ஆனால் அந்த போர்வையில் எமது குரலை ஒடுக்க முற்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே நாம் அவற்றில் பங்கேற்றிருந்தோம். ஆனால் அரசாங்கம் அதைக்கண்டு அஞ்சுகிறது. அதனால்தான் கள்வர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டதாகக் கூறுகின்றனர்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டங்களுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எம்முள் இருந்தால் அவர்களையும் கைது செய்யுங்கள். அவர்களுக்கெதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கள்வர்களை கைது செய்வதாகக்கூறி எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவதற்கு முயற்சித்தால் அதை ஏற்க முடியாது. நாம் அதற்கெதிராக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருக்கலாம். அவர் நீதிமன்றத்தை புறக்கணிக்கக் கூடியவரா இருந்தால் மாத்திரமே அவரை கைது செய்யலாம். ஆனால் அவர் அவ்வாறு செயற்படவில்லை. சகல விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றார். அவ்வாறிருக்கையில் எந்தவொரு அடிப்படையும் இன்றியே அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் எதிர்க்கட்சியினரை முடக்க முயற்சித்தால் அதற்கெதிராக நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். மாறாக ஆட்சியமைப்பதற்காக நாம் ஒன்றிணையவில்லை. எமது கூட்டணி ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதாக இருக்கும்.
2015 இல் காணப்பட்டதை விட தற்போது முற்றிலும் மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது. குறிப்பிட்டவொரு கட்சிக்கான வாக்கு வங்கியொன்று தற்போது இல்லை. தற்போதைய வாக்குகள் காலத்துக்கு காலம் மாற்றமடையக் கூடியவையாகவுள்ளன.
எனவே இனி காலந்தோரும் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஆட்சியமைக்கும் என்று எண்ணிக் கொண்டிருப்பது தவறாகும். நாடு என்ற ரீதியில் அரசியலில் ஈடுபடும் உரிமை எமக்கிருக்கிறது. அந்த உரிமையை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment