(இராஜதுரை ஹஷான்)
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சொத்து மற்றும் பொறுப்பு பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் கொண்டுவந்த 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தால் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
இதற்கு முன்னரான சட்டத்தில் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே பகிரங்கப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டது.
ஆனால் நாங்கள் இயற்றிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் குறித்த விடயங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு வெளிப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் தலைமையிலான அரசாங்கத்தின் தலைவர்கள் அறியவில்லை.
இந்த சட்டத்தின் ஊடாக தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த நேரிடும் என்று தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் அறிந்திருக்கவில்லை.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தை வரையறுத்து சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்கள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார். இந்த பயணங்களுக்கான செலவு விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 8(2) பிரிவில் தமக்கு பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப் பெறுமாயின் அதன் விபரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பரிசாகவோ அல்லது வேறு வழியில் கிடைக்கப் பெற்ற சலுகைகளையோ வெளிப்படுத்தவில்லை.
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்குதல் அல்லது விடயங்களை மறைத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஒருவரின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்கப்படாத சொத்து அவருக்கு உரிமையானதாக இருந்தால் அதனை அரசுடமையாக்க முடியும். உண்மை தகவல்களை மறைத்தால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல், உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஒரு வருட கால ஆட்சியில் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசியல் பழிவாங்கல்கள் மாத்திரமே முன்னிலையில் உள்ளன என்றார்.
No comments:
Post a Comment